சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த (01.08.2026) அன்று சரோஜா என்பவரது வீட்டிற்கு தச்சு வேலை செய்வதற்காக பாபு என்பவர் சென்ற நிலையில் அருகில் குடிபோதையில் இருந்த நபர்கள் பாபுவைத் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, அவர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக மதகுபட்டி காவல் நிலைய குற்ற எண் 226/2026, பிரிவுகள் 296(b), 109 மற்றும் 103(1) BNS-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான பன்னீர்செல்வம் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தலைமறைவு குற்றவாளியான சியம் சுந்தர் (25). என்பவர், மலேசியா நாட்டிற்கு தப்பிச் சென்றது பாஸ்போர்ட் தரவுகளின் அடிப்படையில் விசாரணையில் தெரிய வந்தது.
சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தலைமறைவு குற்றவாளியைக் கண்டறிந்து கைது செய்யும் நோக்கில், குடியுரிமைப் பிரிவின் (Bureau of Immigration) மூலம் Look Out Circular (LOC) பிறப்பிக்கக் கோரி விண்ணப்பிக்கப்பட்டது. அதன்பேரில், டெல்லி விமான நிலைய குடியுரிமைப் பிரிவு அதிகாரிகளால் சம்பந்தப்பட்ட குற்றவாளி அடையாளம் காணப்பட்டு பிடித்து வைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, மதகுபட்டி காவல் நிலைய காவல்துறையினர் டெல்லி சென்று சியம் சுந்தரைக் கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.மூவேந்திரன்




















