நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள விவேகானந்தா மகளிர் கல்லூரியில் கல்லூரி மாணவியர்களுக்கான “போதை இல்லா இந்தியா இயக்கம்” விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. லி. மதுபாலன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. யாதவ் கிரிஷ் அசோக், இ.கா.ப., அவர்கள் இணைந்து தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (PEW) திரு. N. பாலசுப்பிரமணியன், அவர்களும் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் மாணவியர்களுக்கு போதைப்பொருட்களின் தீமைகள், அவற்றால் ஏற்படும் உடல் மற்றும் மனநல பாதிப்புகள், குடும்பம் மற்றும் சமூகத்தில் ஏற்படும் விளைவுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வுடன் இருந்து, அதனை முற்றிலும் தவிர்த்து, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஏராளமான மாணவியர்கள் கலந்து கொண்டனர்.




















