கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய கவிதா @ பானுமதி (33) என்ற பெண் மீது “Drug Offender” பிரிவின் கீழ் தடுப்புக் காவல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, வேலூர் சிறப்பு பெண்கள் சிறையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். கடந்த (01.08.2026) அன்று கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாஞ்சாலியூர் பகுதியில் காரில் கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் ஆய்வாளர் திரு. மணிமாறன் தலைமையில், காவல் உதவி ஆய்வாளர் திரு. M. அன்பழகன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு. கிருஷ்ணமூர்த்தி, தலைமை காவலர் 973 திரு. பூங்காவனம் மற்றும் பெண் தலைமை காவலர் 1956 திருமதி. பூவிழி ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த பதிவு எண் இல்லாத டாடா இன்டிகா காரில் இருந்து ஆண் நபர் ஒருவர் தப்பியோடிய நிலையில், காரில் இருந்த கவிதா @ பானுமதி (33) என்பவரை காவல் குழுவினர் பிடித்தனர். காரைச் சோதனை செய்ததில் 1.250 கிலோ கஞ்சா, கஞ்சா கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கார் மற்றும் ரூ.70,650/- ரொக்கப் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இதையடுத்து கவிதா கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். மேலும், காவல்துறையினரின் விசாரணையில் கவிதா மீது 2021 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் SIPCOT, ஓசூர் டவுன், குனியமுத்தூர் (கோயம்புத்தூர்) மற்றும் கந்திகுப்பம் காவல் நிலையங்களில் 4 கஞ்சா தொடர்பான வழக்குகள் இருப்பது தெரியவந்தது.
இதில், கந்திகுப்பம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சுமார் 200 கிலோ கஞ்சா தொடர்பான குற்றச்சம்பவத்தில் அவருக்கு தொடர்பு இருப்பதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து போதைப்பொருள் தொடர்பான குற்ற வழக்குகளில் தொடர்புடையவராக இருந்ததைக் கருத்தில் கொண்டு, கவிதா மீது தடுப்புக் காவல் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி அனிதா மற்றும் கிருஷ்ணகிரி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. ராமச்சந்திரன் ஆகியோர் பரிந்துரை செய்தனர். அதனடிப்படையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரும் மாவட்ட குற்றத் தடுப்பு நடுவருமான திரு. C. தினேஷ் குமார், இ.ஆ.ப., அவர்கள் (28.08.2026) அன்று தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பித்தார்.
அவ்வுத்தரவின்படி, கவிதா வேலூர் சிறப்பு பெண்கள் சிறையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். மேலும், தடுப்புக் காவல் உத்தரவின் நகலை கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் ஆய்வாளர் திரு. மணிமாறன் அவர்கள் நேரில் சென்று சிறையில் உள்ள கவிதாவிடம் வழங்கினார். போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்




















