கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புக்கசாகரம் கிராமத்தைச் சேர்ந்த சந்து என்பவரின் விவசாய நிலத்தில், தண்ணீர் பாய்ச்ச பயன்படுத்தப்பட்ட சுமார் ரூ.20,000 மதிப்பிலான SIEMENS 5 HP மின்மோட்டார், கடந்த (18.07.2026) அன்று இரவு திருடப்பட்டது. மறுநாள் காலை நிலத்திற்கு சென்ற சந்து, மின்மோட்டார் காணாமல் போனதை அறிந்து தேடிக்கொண்டிருந்தபோது, சம்பவ இடத்தில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த நபரை கவனித்தார். அவரைக் கண்டதும் அந்த நபர் தப்பிச் செல்ல முயன்ற நிலையில், அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் பிடித்து விசாரித்தபோது, முந்தைய இரவு திருடிய மின்மோட்டாரை விற்பனை செய்வதற்காக வந்ததாக ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து சந்து அளித்த தகவலின் பேரில் பேரிகை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குற்றவாளியை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர், சந்து அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்ட குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. J.ஆண்டனி பாபு




















