மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அன்னம்பாரிப்பட்டி பகுதியில், உசிலம்பட்டி–வத்தலக்குண்டு சாலை விரிவாக்கப் பணிக்காக சாலையோர மின்கம்பங்களை மாற்றியமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணியில் சோழங்குருணி கிராமத்தைச் சேர்ந்த அருண் (21). பாண்டியராஜன் (22). மற்றும் சங்கரன்கோவில் அருகே தலைவன்கோட்டையைச் சேர்ந்த பொன்பாண்டி (38). ஆகியோர் மின்கம்பத்தின் மீது ஏறி பணியாற்றிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இரவு 8 மணியளவில் திடீரென மின்சார வயர்களில் மின்சாரம் பாய்ந்தது. பாதுகாப்பு கயிறு அணிந்திருந்ததால் மூவரும் மின்கம்பத்திலிருந்து கீழே விழாமல் தொங்கிய நிலையில் இருந்தனர். உடனடியாக அப்பகுதியினர் மின்சாரத்தை துண்டித்து, மூவரையும் மீட்டு கீழே இறக்கினர். பலத்த காயமடைந்த மூவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாதுகாப்பு கயிறு அணிந்திருந்ததால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். பணி நிறைவடையாத நிலையில் மின்சார இணைப்பு வழங்கப்பட்டது எப்படி என்பது குறித்து உசிலம்பட்டி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















