மதுரை: மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சாப்டூர் கிராமம், சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கசுவாமி திருக்கோவில் அமைந்துள்ள சதுரகிரி மலை ஒதுக்கப்பட்ட வனத்தில் நேற்று (10.08.2026) காட்டுத்தீ ஏற்பட்டு, அதனை வனத்துறையினர் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் இன்று (11.08.2026) சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கசுவாமி திருக்கோவிலுக்கு அனுமதி இல்லை என பத்திரிக்கைச் செய்தி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று (11.08.2026) காட்டுத்தீ முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக வனத்துறையினரிமிருந்து தகவல் வரப்பெற்றதால் சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கசுவாமி திருக்கோவிலுக்கு நாளை (12.08.2026) செல்வதற்கு அனுமதி வழங்கி இன்று (11.08.2026) பத்திரிக்கைச் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று (11.08.2026) இரவு சுமார் 07.00 மணியளவில் காட்டுத்தீ திரும்பவும் பரவியுள்ளதாக மதுரை மாவட்ட கண்காணிப்பாளரிடமிருந்து தகவல் வரப்பெற்றது. மேலும் காட்டுத்தீயை கட்டுப்படுத்திட வனத்துறை, காவல்துறையினர் உரிய நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் உயிர் மற்றும் பாதுகாப்பு நலன் கருதி நாளை (12.08.2026) அருள்மிகு சுந்தரமகாலிங்கசுவாமி திருக்கோவிலுக்கு செல்வதற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் எனவும் காவல்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் காட்டுத்தீயினால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் உயிர் மற்றும் பாதுகாப்பிற்கு ஏற்படக்கூடிய அபாயத்தை கருத்தில் கொண்டு, இயல்பு நிலைமை திரும்பும் வரை நாளை (12.08.2026) சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கசுவாமி திருக்கோவிலுக்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் செல்வதற்கு அனுமதி இல்லை என மதுரை மாவட்ட ஆட்சித்தலைவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நிலைமை சீரான பிறகு பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கசுவாமி திருக்கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி குறித்து அறிவிக்கப்படும் எனவும் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்




















