மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில், பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக தினமும் ஏராளமான மனுக்கள் பெறப்படுகின்றன. அதற்கு தீர்வு காணும் பொருட்டு, பொது மக்களின் பிரச்சனைகளை திறம்படத் தீர்வு காண்பதை உறுதி செய்வதற்கும், காவல்துறையை பொதுமக்கள் எளிதில் அணுகுவதை மேம்படுத்துவதற்கும், மதுரை மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் காலை 11.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை “பொதுக் குறைதீர்ப்பு தினமாக” அனுசரிக்கப்படும். இந்த நாட்களில், மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள், சிறப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், மாவட்டத்தில் உள்ள துணைப் பிரிவு அலுவலர்கள் மற்றும் அந்தந்த காவல் நிலையங்களின் காவல் நிலைய அலுவலர்கள் ஆகியோர் அந்ததந்த அலுவலகங்களில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை நேரில் பெற்றுக்கொண்டு, மனுதாரர்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக அவர்களுடன் கலந்துரையாடுவார்கள்.
பொதுக் குறைதீர்ப்பு நாளில், மேற்கூறிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள், புகார்தாரர்களிடமிருந்து மனுக்களைப் பெற்றவுடன், சமர்ப்பிக்கப்பட்ட குறைகளைப் பரிசீலித்து, உரிய சட்ட நடவடிக்கை மற்றும் மேல் நடவடிக்கைகாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்குவார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்டப்படி விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுவார்கள். ஆகையால் மதுரை மாவட்ட பொது மக்கள் இக்குறைத் தீர்வு நாளை பயன்படுத்தி நிவாரணம் தேடிக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்



















