மதுரை: தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு இயக்குனர் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வாரத்திற்கு இரண்டு முறை புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனுநாள் நடத்தி, குறைகளை கேட்டு மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உத்தரவு இட்டதின் பேரில் புதன்கிழமை மதுரை புறநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனுநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. புதனன்று நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்,
காவல் துணை ஆணையர்கள் வடக்கு கார்த்திகேயன் மற்றும் தெற்கு இனிகோ திவ்யன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள்
குறை கேட்கும் நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து 50 மனுக்கள் பெறப்பட்டது.
மேலும் இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் அளித்துள்ள மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க அந்தந்த சரக காவல் உதவி ஆணையர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் உட்கோட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய சரகத்தில், காவல்துறை இயக்குனர் மற்றும் தமிழ்நாடு காவல் படை தலைவர் உத்தரவுப்படி, காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் பேரில் புதனன்று ஒத்தக்கடை தனியார் மண்டபத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்தப்பட்டது.
மேற்படி பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமில் ஊமச்சிகுளம் உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் இமயவரம்பன் தலைமையில் ஒத்தக்கடை காவல் நிலையம், ஊமச்சிகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் கருப்பாயூரணி காவல் நிலைய ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டு சுமார் 50 க்கு மேற்பட்ட மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு தீர்வு காணப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி



















