திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல்துறையால் அறிமுகப்படுத்தபட்ட “மக்களை தேடி மாவட்ட காவல்” என்ற சிறப்பு திட்டத்தின் முதலாவது முகாம் (12.03.2026) அன்று திருநெல்வேலி உட்கோட்டத்தில் உள்ள தாழையூத்தில் சிறப்பாக ஆரம்பமானது.
இதில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. வி. பிரசண்ண குமார், இ.கா.ப., கலந்து கொண்டு ஊரக உட்கோட்ட எல்லைக்குட்பட்ட 9 காவல் நிலைய பகுதிகளில் இருந்து மனு கொடுத்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்களிடமும் பொறுமையுடன் குறைகளை கேட்டறிந்து அனைத்து மனுக்களையும் விரைந்து முடிக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ,”திருநெல்வேலி மாவட்ட மக்கள் காவல்துறைக்கு வழங்கும் ஒத்துழைப்பு மிகவும் பாராட்டத்தக்கது. ஒரு சிலர் செய்யும் தவறிற்காக முழு ஊரையும் குற்றம்சாட்டுவது சரியல்ல. தவறு செய்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதுடன், நல்லது செய்பவர்களை பாதுகாப்பதே காவல்துறையின் முக்கிய கடமை” என்று தெரிவித்த அவர், பொதுமக்கள் தங்களது பிரச்சனைகள் குறித்து எந்த நேரத்திலும் தன்னை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில் “உங்களுடன் உங்கள் எஸ்.பி.” என்ற பெயரில் ஒரு கைப்பேசி எண்ணும் அறிவித்ததோடு “கிராமத்து காவல் திட்டம்” என்ற திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு காவலர் வாரத்திற்கு மூன்று முறை நேரடியாக சென்று மக்களை சந்தித்து, அவர்களுடைய குறைகளை கேட்டறிந்து அதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவனத்திற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். இத்திட்டம் மாவட்ட மக்களிடையே மிகுந்த வரவேற்பையும், மகிழ்ச்சியையும் பெற்றுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















