திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த புலிக்குளம் பகுதியில் கார்ப்பரேட் நிறுவனமான டி மார்ட் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இதனால் உள்ளூர் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி வியாபாரிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பொன்னேரி வட்டார நாடார்கள் சங்கத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். பொருளாளர் காமராஜ் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகி வில்லியம்ஸ் மற்றும் முன்னாள் தலைவர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, கார்ப்பரேட் நிறுவனங்களின் வருகையால் சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவதாகக் கூறி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், டி மார்ட் கட்டுமானப் பணிகளை நிறுத்தக் கோரி, அடுத்த கட்டமாக திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்துவதுடன், சுமார் 5,000 பேருடன் பொன்னேரியிலிருந்து புலிக்குளம் வரை பேரணியாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், தொடர்ந்து பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் வணிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பொன்னேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் பங்கேற்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. மில்டன்



















