திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மானூர் காவல் நிலைய சரகம், கட்டாரங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில், தேவாலய பாதிரியாராக உள்ள சாமுவேல் டேவிட் நவமணிக்கும் தேவாலயத்தின் உள்ளூர் நிர்வாகிகளுக்கும் இடையே நிர்வாகம் தொடர்பாக கருத்து வேறுபாடு மற்றும் பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், (31.05.2026) அன்று தேவாலய உண்டியல் பணம் கணக்கிடப்பட்டபோது, தனது அனுமதியின்றி உண்டியல் பணம் எண்ணப்பட்டதாகக் கூறி பாதிரியார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் தேவாலயத்தைச் சார்ந்த சிலர், தேவாலய வளாகத்திலுள்ள பாதிரியார் இல்லத்திற்குச் சென்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தபோது, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இத்தகராறு சம்பவத்தில், தனது இல்லத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டதாக பாதிரியார் அளித்த புகாரின் பேரில், (31.05.2026) அன்று மானூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு தற்போது விசாரணையில் இருந்து வருகிறது. மேலும், இரு தரப்பினருக்கு இடையேயான நிர்வாகப் பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே வருவாய் உட்கோட்ட அலுவலரிடம் (RDO) BNSS பிரிவு 126-ன் கீழ் நடவடிக்கை எடுக்க அறிக்கை அனுப்பப்பட்டு, அதற்கான விசாரணை நிலுவையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்பான வீடியோக்கள் மற்றும் தகவல்கள் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் உண்மை நிலையை அறிந்து கொள்ளும் பொருட்டு மேற்கண்ட விளக்கம் மாவட்ட காவல்துறையால் வெளியிடப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்

















