திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் 6 அலகுகளில் 2630 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகி்ன்றனர். பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசு 15ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வதாக அறிவித்துள்ள நிலையில் அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வரும் தங்களுக்கு முன்னுரிமை அளித்து பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என வலியுறுத்தி தொழிலாளர்கள் அனல் மின் நிலைய வாயிலில் முழக்கங்களை எழுப்பினர்.
அனல் மின்நிலையத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள், அடிப்படை ஊதியம் வழங்கிட வேண்டும், மின் வாரியம் முன்வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கடந்த ஆட்சிகளில் இருந்தே குறைந்த ஊதியத்திற்கு பணியாற்றி வருவதாகவும் நியாயமான ஊதியம் வழங்கப்படவில்லை எனவும் ஆதங்கம் தெரிவித்தனர். முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கைகளை முறையிட தங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் புகார் தெரிவித்தனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்தால் அடுத்தடுத்து மின் உற்பத்தி பாதிக்கும் வகையில் மிகப்பெரிய அளவிலான போராட்டங்களில் ஈடுபடுவோம் என ஒப்பந்த தொழிலாளர்கள் எச்சரித்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு




















