செங்கல்பட்டு: செங்கல்பட்டு இராஜேஸ்வரி வேதாசலம் அரசினர் கலைக் கல்லூரி கோல்டன் ஜூப்ளி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில், கொடை வள்ளல் ராவ் பகதூர் வேதாசலம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, செங்கல்பட்டில் உள்ள கிருஷ்ணா மஹாலில் மிகப் பிரம்மாண்டமான நினைவு விருது வழங்கும் விழா நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சமூக சேவை, கல்வி, மருத்துவம், கலை, இலக்கியம், மனிதநேயம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக சாதனை புரிந்தவர்களை பாராட்டும் வகையில் “ராவ் பகதூர் வேதாசலம் – இராஜேஸ்வரி அம்மா நினைவு விருது” வழங்கப்பட்டது.
விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, குத்துவிளக்கு ஏற்றுதல் மற்றும் நடன அரங்கேற்றத்துடன் சிறப்பாக நடைபெற்றது. அமைப்பின் தலைவர் டாக்டர் ஜெ. ஜான்சன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக நீதியரசர் ஸ்ரீராம், டாக்டர் ஜெ. முத்துக்குமரன், டாக்டர் என். கார்த்திகேயன், டாக்டர் ஆர்.எஸ். கிருத்திகா தேவி, லயன் வி.பி. உதயசூரியன், முன்னாள் முதல்வர் முனைவர் ப.கி. கிள்ளிவளவன், லீலா, தாரா மற்றும் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். விழாவில் மொத்தம் 102 சாதனையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ராவ் பகதூர் வேதாசலம் மற்றும் இராஜேஸ்வரி அம்மா பெயரில் நினைவு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பூமி வெப்பமடைதலை தடுக்கும் நோக்கில், விழாவில் கலந்து கொண்ட சுமார் 750 பேருக்கு தலா ரூ.200 மதிப்பிலான மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினர்களுக்கும் மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. விழாவில் ராவ் பகதூர் வேதாசலம் மற்றும் இராஜேஸ்வரி அம்மா ஆகியோரின் சமூகநல சேவைகள், தன்னலமற்ற உதவிகள் மற்றும் நன்கொடைகள் குறித்து டாக்டர் ஜெ. ஜான்சன் சிறப்பாக எடுத்துரைத்தார். ஜெயலட்சுமி தலைமையேற்ற இந்நிகழ்வில், லக்ஷ்மி நம்பியார் வரவேற்புரை வழங்கினார். இறுதியாக சுகுமாறன் நன்றியுரை ஆற்றினார். இந்த விழாவில் சுமார் 700-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்




















