மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் உட்கோட்டம், கீழவளவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியாமங்கலத்தைச் சேர்ந்த பெரியகருப்பன் மற்றும் சத்தியா தம்பதியரின் 7 வயது மகன் முத்துவேல், கடந்த (25.10.2026) அன்று காலை சுமார் 11.00 மணியளவில் தனியாமங்கலம் அடைக்கலம் காத்த அம்மன் கோவில் அருகே விளையாடச் சென்றவர், மாலை 04.00 மணி வரை வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தேடியும் சிறுவனைக் கண்டுபிடிக்க முடியாததால், அவரது தாயார் சத்தியா கீழவளவு காவல் நிலையத்தில் (25.10.2026)-ம் தேதி புகார் அளித்தார். அதன் பேரில், கீழவளவு காவல் நிலைய குற்ற எண் 341/2026, U/s Boy Missing-கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, அவர்களின் உத்தரவுபடி சிறுவனைக் கண்டுபிடிப்பதற்காக காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள்- 90 பேர் கொண்ட 5 தனிப்படைகளை அமைத்து, இரவு முழுவதும் தீவிர தேடுதல் நடவடிக்கை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக (26.10.2026) அன்று காலை சுமார் 10.45 மணியளவில், தனியாமங்கலத்தைச் சேர்ந்த ராஜாங்கம் என்பவருக்குச் சொந்தமான பாழடைந்த, ஆளில்லாத வீட்டிற்குள் சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவினர் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சிறுவனின் சடலம் கைப்பற்றப்பட்டு, பிரேதப் பரிசோதனை மற்றும் சட்டப்படியான நடவடிக்கைகளுக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேற்கொண்ட விரிவான விசாரணையில், (25.10.2026) அன்று காலை சுமார் 11.00 மணியளவில், இறந்த சிறுவனும் அதே பகுதியைச் சேர்ந்த (10). வயது சிறுவனும் கோவில் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, விளையாட்டுத்தனமாக அந்த 10 வயது சிறுவன் இறந்த சிறுவனின் கழுத்தை கயிற்றால் இறுக்கியது தெரியவந்தது. அப்போது இறந்த சிறுவன் ஓடியபோது கோவில் சுவரில் மோதியதில் வாயில் முன்பற்கள் சேதமடைந்ததாகத் தெரியவந்தது. பின்னர், இறந்த சிறுவன் அந்த 10 வயது சிறுவனின் வீட்டிற்குச் சென்று தண்ணீர் கேட்டுள்ளான். அப்போது, அந்த 10 வது சிறுவனின் தாயார் சந்தியா முன்னிலையில், இறந்த சிறுவன் மயங்கி விழுந்துள்ளான்.
சிறுவன் உயிரிழந்ததை அறிந்த சந்தியா, தனது மகன் செய்த செயலை மறைப்பதற்கும், சம்பவம் தொடர்பான சாட்சியங்களை அழிப்பதற்கும், இறந்த சிறுவனின் உடலைத் தனியாமங்கலத்தைச் சேர்ந்த ராஜாங்கத்திற்குச் சொந்தமான பாழடைந்த வீட்டிற்குள் மறைத்து வைத்தது விசாரணையில் தெரியவந்தது. இவ்வழக்கில், சட்டத்திற்கு முரண்பட்ட சிறுவன் இளஞ்சிறார் நீதிக் குழுமத்தின் முன்பாக ஆஜர்படுத்தப்பட உள்ளான். மேலும், சாட்சியங்களை அழிக்க முயன்றது தொடர்பாக, சிறுவனின் தாயார் சந்தியா கைது செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என்ற விவரம் தங்களுக்கு தெரிவித்து கொள்ளப்படுகிறது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















