1997-ஆம் ஆண்டு நேரடித் தேர்வின் மூலம் ஐபிஎஸ் அதிகாரியான அயூஷ் மணி திவாரி, தனது 29 ஆண்டுகால காவல் பணியில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து, காவல்துறையில் தனித்துவமான பங்களிப்பை வழங்கியுள்ளார். தமிழகத்தில் தூத்துக்குடி, மதுரை, திருவள்ளூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய இவர், சென்னையின் அடையாறு பகுதியில் பணியாற்றிய காலத்தில், குற்றத் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்தார். குறிப்பாக, 2003-ஆம் காலகட்டத்தில் காவல் சாவடிகள் அமைத்தல், நேரடி கண்காணிப்பு மற்றும் இரவு பகலாக ரோந்துப் பணிகளை மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகள் மூலம் காவல்துறையின் களப்பணியை வலுப்படுத்தினார்.
மேலும், தமிழக ஆளுநரின் மெய்க்காப்பாளராகவும், கோவையில் காவல்துறை துணைத் தலைவராகவும் (DIG), சென்னையில் ஆயுதப்படை காவல்துறை தலைமை ஆய்வாளர் (IG) பொறுப்பிலும் பணியாற்றியுள்ளார். மத்திய அரசுப் பணியில் ஈடுபட்டபோது, எல்லைப் பாதுகாப்புப் படையில் (BSF) ராஜஸ்தான் மாநிலத்தில் ஐஜியாகவும், குஜராத்தில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவான போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தில் (NCB) துணை இயக்குநராகவும் பணியாற்றினார். தொடர்ந்து, விமான நிலைய பாதுகாப்புப் பணியகத்திலும் (BCAS) முக்கியப் பொறுப்பு வகித்தார். பின்னர், தமிழ்நாடு மின்வாரிய பாதுகாப்புப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் கூடுதல் காவல்துறை இயக்குநர் (ADGP) அந்தஸ்தில் பணியாற்றிய இவர், தற்போது காவல்துறை தலைமையகத்தில் கூடுதல் காவல்துறை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.
தனது காவல் பணிக்காலத்தில் வீரதீரச் செயல்களுக்கான விருது மற்றும் குடியரசுத் தலைவர் விருது உள்ளிட்ட அங்கீகாரங்களைப் பெற்றுள்ள அயூஷ் மணி திவாரிக்கு, அவரது பிறந்தநாளை முன்னிட்டு காவல்துறைப் பணியிலும் மக்கள் சேவையிலும் மேலும் சிறந்து விளங்க மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவிக்கப்படுகின்றன.




















