மதுரை: மதுரை, அக். 18: மதுரை மாவட்டம் இடையப்பட்டி காவல் பயிற்சிப் பள்ளியில், தமிழ்நாடு பயிற்சி காவல் உதவி ஆய்வாளர்களுக்கான 9 நாள் வனவாழ் பயிற்சி நிறைவு விழா இன்று (18.10.2026) நடைபெற்றது. கடந்த (10.10.2026) முதல் (18.10.2026) வரை நடைபெற்ற இப்பயிற்சியில் 234 ஆண் அதிகாரிகள், 65 பெண் அதிகாரிகள் என மொத்தம் 299 பேர் பங்கேற்று பயிற்சியை நிறைவு செய்தனர். இதையடுத்து, அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். தேவநாதன் தலைமை உரையாற்றுகையில், இளம் காவல் அதிகாரிகள் லஞ்சத்தைத் தவிர்த்து நேர்மையுடன் பணியாற்ற வேண்டும் என்றும், நேர்மை அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நற்பெயரை உருவாக்கும் என்றும் அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் காவல் பயிற்சிப் பள்ளி துணை முதல்வர் எஸ். செந்தில்குமார், ஊமச்சிகுளம் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் தனு சிங் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சத்தியமங்கலம் சிறப்பு இலக்குப்படை காவல் ஆய்வாளர் ஆர். மோகன்ராஜ் வரவேற்புரையும், ஈரோடு சிறப்பு இலக்குப்படை காவல் துணைக் கண்காணிப்பாளர் கே. சசிக்குமார் நன்றியுரையும் வழங்கினர்.



















