சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் A.அமல்ராஜ் இ.கா.ப., அவர்கள் (24.07.2026) பிராட்வே, ராஜா அண்ணாமலை மன்றத்தில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் சார்பில் நடத்தப்பட்ட ‘‘சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, விபத்துக்களின்போது பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை மீட்டு, உயிர் காக்கும் பொன்னான நிமிடங்களை (Golden Hours) சிறப்பாக கையாண்டு, விபத்தில் சிக்கியவர்களை தக்க சமயத்தில் மருத்துவமனையில் விரைந்து சேர்த்து, உயிர்களை காப்பாற்றிய காவல் ஆளிர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், செவிலியர்கள், மாணவ, மாணவிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட பொதுமக்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.
இதனை தொடர்ந்து காவல் ஆணையாளர் அவர்கள் ஆற்றிய சிறப்புரை, மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று உயர்ந்த நிலையை அடைவதற்கு நேரம் மேலாண்மை மிகவும் முக்கியமானதாகும், அதிகளவில் விபத்துக்களால் உயிரிழப்பு ஏற்படுகிறது. சரியான தற்காப்பு முறைகளை கையாண்டும், சாலை விதிகளை முறையாக பின்பற்றினால் சாலை விபத்துக்களை குறைக்கலாம், சாலைகள் சாகசத்திற்கான இடங்கள் அல்ல, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கான வழித்தடம், ஓரு இடத்திற்கு கிளம்புவதற்கு முன்பு திட்டமிட்டு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரே செல்லும் பழக்கத்தை வளர்த்து கொண்டால் கடைசி நேர பதற்றத்தை தவிர்க்கலாம், பயணங்களின் போது சாலை விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களை கண்டால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், ஒரு வேளை அவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால், சரியான முதலுதவி பயிற்சிகள் தெரிந்து இருந்தால் அவர்களுக்கு உதவி செய்யலாம், விபத்தில் உதவி புரிபவர்களுக்கு, காவல் துறை உதவும், இருசக்கர வாகனங்களை இயக்கும் போது கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்வதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து நீயா, நானா திரு.கோபிநாத் அவர்கள் சாலை பாதுகாப்பு, சாலை விதிகளை பின்பற்றுவது குறித்து புள்ளி விபரங்களை கூறி அறிவுரைகள் வழங்கி உரையாற்றினார். காவல் கூடுதல் ஆணையாளர் (போக்குவரத்து) முனைவர் B.சாமூண்டிஸ்வரி, இ.கா.ப, அவர்கள் Road Safety Patrol பள்ளி மாணவர்களுக்கு தலைக்கவசங்களை (Helmet) வழங்கினார். இணை ஆணையாளர் (போக்குவரத்து தெற்கு) திரு.P.பகலவன், இ.கா.ப, அவர்கள் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு Emoji பேட்ஜ் வழங்கினார். நிகழ்ச்சியின் இறுதியாக காவல் அதிகாரிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் “சாலை விதிகளை மதிப்போம்” என உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையாளர்கள் திரு.P.பாலாஜி, (போக்குவரத்து வடக்கு), திருமதி.S.மேகலீனா ஐடன், (போக்குவரத்து கிழக்கு), திரு.K.முத்துக்குமார் (போக்குவரத்து தெற்கு), போக்குவரத்து உதவி ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 800 மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்…




















