திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார், இ.கா.ப. அவர்களின் அறிவுறுத்தலின்படி, (05.07.2026) அன்று மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்கிய கடைவீதிகள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் காவல்துறையினர் நடை ரோந்து (Foot Patrol) பணியை மேற்கொண்டனர். இந்த நடை ரோந்தின்போது, பொதுமக்களுடன் நேரடியாக கலந்துரையாடிய காவல்துறையினர், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அனைவரின் பங்களிப்பின் அவசியம், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வழிமுறைகள் மற்றும் அவசரகால உதவி எண்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், சாலைப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும், நான்கு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் பாதுகாப்பு பெல்ட் அணிய வேண்டும், போக்குவரத்து விதிகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது, செல்போன் பயன்படுத்தியபடி வாகனம் இயக்குவதைத் தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுரைகளும் வழங்கப்பட்டன. பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் இதுபோன்ற நடை ரோந்து மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















