கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றங்களை முன்கூட்டியே தடுத்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை உணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின், IPS அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர நடைரோந்து (Foot Patrol) பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய சந்தைகள், கடைவீதிகள், பேருந்து நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் இந்த நடைரோந்து பணியின் மூலம் சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் சட்டவிரோத செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், பொதுமக்களுடன் நேரடியாக கலந்துரையாடிய காவல்துறையினர், பெண்கள் பாதுகாப்பு, சாலைப் பாதுகாப்பு, போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவதன் அவசியம் மற்றும் அவசரகால காவல் உதவி எண்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், குற்றங்களைத் தடுக்கவும், காவல்துறை பொதுமக்கள் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும் இதுபோன்ற தீவிர நடைரோந்து மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.




















