மதுரை: மதுரை மாவட்டக் காவல் துறையினர் (27.06.2026) நடத்திய தீவிர குற்றத்தடுப்பு மற்றும் ரோந்து பணியின் போது, சட்டவிரோதமாக மண் கடத்தலில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டு, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முதலாவது சம்பவத்தில், சமயநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட தேனூர் 2-வது பேருந்து நிறுத்தம் அருகே, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவல் துறையினர் நடத்திய சோதனையில், சட்டவிரோதமாக கிராவல் மண் ஏற்றி வந்த TN-04-AL-3953 எண் கொண்ட டிப்பர் லாரியைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். இது தொடர்பாகச் சட்டவிரோத கடத்தலில் ஈடுபட்ட வாகன ஓட்டுநர் சின்னமருது என்பவரைச் சமயநல்லூர் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.
அதேபோல் மற்றொரு சம்பவத்தில், அலங்காநல்லூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மற்றும் காவல் குழுவினர் பண்ணைக்குடி கிராம பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கொட்டி வைக்கப்பட்டிருந்த கிராவல் மண்ணை, TN-59-CM-3386 எண் கொண்ட JCB இயந்திரம் மூலம் திருட்டுத்தனமாக TN-20-AE-5740 என்ற டிப்பர் லாரியில் ஏற்றி விற்பனை செய்ய முயன்ற மணிமாறன் மற்றும் ஆர்த்திகேயன் ஆகிய இருவரை அலங்காநல்லூர் காவல் துறையினர் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். பொதுச் சொத்தைத் திருடி, சட்டவிரோத கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீதான இந்தத் துரித நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்



















