திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், களக்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடுவூர்பட்டி கிராமத்தில், சிவன்பாண்டி(45). என்பவர் சட்ட விரோதமாக மதுபானங்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வருவதை அறிந்த காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இதனையடுத்து, சிவன்பாண்டி(45). மற்றும் அவரது மகன் சார்லஸ் நவீன்(21). ஆகியோர் கைது செய்யப்பட்டு, களக்காடு காவல் நிலையத்தில் , குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மாற்றுத்திறனாளியான சிவன்பாண்டியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, சட்டப்படி அவருக்கு காவல் நிலைய பிணை வழங்கப்பட்டு, அவரது உறவினருடன் அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில், பிற்பகல் சிவன்பாண்டி மீண்டும் களக்காடு காவல் நிலையத்திற்கு வந்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், பூச்சி மருந்தையும் குடித்துள்ளார்.
அவருடன் வந்திருந்த உறவினர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் மேற்கொண்ட சட்டபூர்வ நடவடிக்கையை திசைதிருப்பும் நோக்கில், சிவன்பாண்டி காவல் நிலையத்திற்கு வந்து பிரச்சினையில் ஈடுபட்டதுடன், பணியில் இருந்த அரசு அதிகாரிகளையும், தரக்குறைவான வார்த்தைகளால் பேசியுள்ளார். இது போன்று காவல்துறையினரின் பணிகளுக்கு இடையூறு விளைவிப்போர் மற்றும் பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படுத்தும் நபர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்


















