திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட என்.பஞ்சம்பட்டி ஆரோக்கியமாதா கோவில் தெருவில் வசித்து வந்த அருள்நாதன் (65). என்பவரை, அதே கிராமத்தில் வசித்துவந்த சந்துரு என்ற சந்திரசேகரன் (28). என்பவர் வாய்த்தகராறு காரணமாக கடந்த (10.07.2022) அன்று கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து அருள்நாதனின் மகள் நிர்மல் நித்தியா என்பவர் அளித்த புகாரின் பேரில், சின்னாளபட்டி காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து சந்துரு என்ற சந்திரசேகரன் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வழக்கின் விசாரணையானது திண்டுக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந்நிலையில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் ஆணைக்கிணங்க, திண்டுக்கல் ஊர உட்கோட்ட பொறுப்பு துணைக்காவல் கண்காணிப்பாளர் குமரேசன் மேற்பார்வையில், சின்னாளபட்டி காவல் நிலைய ஆய்வாளர் சத்யா தலைமையிலான காவல்துறையினர் சாட்சிகளை விரைந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்கைத் தீவிரப்படுத்தி வழக்கின் அனைத்து ஆதாரங்களையும் சமர்பித்தனர். வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், அனைத்துத் தரப்பு சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை விரிவாக விசாரித்த திண்டுக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி அவர்கள், இன்று (16.11.2026) தீர்ப்பு வழங்கினார்.
அதில், எதிரி சந்துரு என்ற சந்திரசேகரன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய ஒரு மாத சிறை தண்டனையும் மற்றும் பணம் ரூ.5,000/- அபராதமும் விதித்து உத்தரவிட்டார். தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குற்றவாளி சந்துரு என்ற சந்திரசேகரன் காவல் பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















