திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபானங்கள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கக் காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, நிலக்கோட்டை காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் சத்திய குமார் மற்றும் மணிமாறன் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் நிலக்கோட்டை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.
மது பாட்டில்கள் பறிமுதல்: அப்போது, அப்பகுதியில் சட்டவிரோதமாகச் சில்லறை மது விற்பனையில் ஈடுபட்ட அக்ரஹாரப்பட்டியைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் ஜெயபிரகாஷ் என்பவரைக் காவல்துறையினர் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 28 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: இதே போல், நிலக்கோட்டை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக நிலக்கோட்டையைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மனைவி சங்கரேஸ்வரி என்பவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 21 கணேஷ் புகையிலைப் பாக்கெட்டுகள் மற்றும் 9 கூல் லிப் (Cool Lip) பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக நிலக்கோட்டை காவல் நிலையத்தில் தனித்தனியே வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















