திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, (01.07.2026) மாவட்டம் முழுவதும் தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வாணியம்பாடி உட்கோட்டம், திம்மாம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தமிழக–ஆந்திர மாநில எல்லை தகரகுப்பம் வாகன சோதனைச் சாவடியில், தலைமை காவலர் முருகானந்தம் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்கள் வினோத் குமார், விக்னேஷ் ஆகியோர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஆந்திர மாநிலத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் தகரகுப்பம் சோதனைச் சாவடி வழியாக வந்த நாற்றம்பள்ளியைச் சேர்ந்த சீனிவாசன் (47). என்பவரை சோதனை செய்ததில், 4.570 கிலோ கிராம் எடை கொண்ட தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சீனிவாசன் கைது செய்யப்பட்டார். பின்னர் திம்மாம்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சட்டப்படி கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணியில் சிறப்பாக செயல்பட்ட காவல் குழுவினரை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்கள் பாராட்டி, இதுபோன்ற சட்டவிரோத செயல்களைத் தடுக்கும் வகையில் தொடர்ந்து விழிப்புடன் சிறப்பாக பணியாற்ற அறிவுறுத்தினார்.




















