சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், எஸ்.எஸ்.கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், கடந்த (07.10.2026) அன்று காலை சுமார் 08.00 மணியளவில் தனது மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, வடவன்பட்டி ஏழுவாணி வயல் பகுதியில் உள்ள கல்யாணி கிணறு அருகே மாட்டைப் பிடித்துக் கொண்டு சென்றபோது, பல்சர் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட மூதாட்டி அளித்த புகாரின் அடிப்படையில், எஸ்.எஸ்.கோட்டை காவல் நிலையத்தில் குற்ற எண் 99/2026, பிரிவு 304(2) BNS-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அபிஷேக் குப்தா, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில், திருப்பத்தூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில், உட்கோட்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதன் ஒரு பகுதியாக, 100-க்கும் மேற்பட்ட CCTV கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், செல்போன் டவர் டம்ப் (Tower Dump) தொழில்நுட்பத்தின் மூலமாகவும் விசாரணை மேற்கொண்டு, குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விரைவாகக் கண்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்டம், பூசாரிப்பட்டியைச் சேர்ந்த அருள்முருகன் (25). மற்றும் திருமுருகன் (23). ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து பறித்துச் செல்லப்பட்ட 2 பவுன் தங்கச் சங்கிலி மீட்கப்பட்டது. இவ்வழக்கில் தொழில்நுட்ப உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளை விரைவாகக் கண்டறிந்து கைது செய்த உட்கோட்ட தனிப்படை போலீசாரின் பணியை, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அபிஷேக் குப்தா, இ.கா.ப., அவர்கள் பாராட்டினார். மேலும், இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அபிஷேக் குப்தா, இ.கா.ப., அவர்கள் எச்சரித்துள்ளார்.




















