திருநெல்வேலி: திருநெல்வேலியை சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவியான ஏ. தௌலத் இஸ்ரா சங்ககாலத் தமிழ் இலக்கியமான குறிஞ்சிப்பாட்டில் இடம்பெற்றுள்ள 99 தமிழ் மலர்களின் பெயர்களை 31 வினாடிகளில் அதிவேகமாகவும், பிழையின்றியும் மனப்பாடமாக ஒப்புவித்து, அமெரிக்கா உலக சாதனைப் புத்தகத்தில் (United States of America Book of World Records) இடம் பெற்று புதிய உலக சாதனையை படைத்துள்ளார். மாணவி தௌலத் இஸ்ரா, தனது அசாத்திய நினைவாற்றல் மற்றும் அறிவுக்கூர்மையின் மூலம் ஏற்கனவே பல்வேறு துறைகளில் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, ரூபிக்ஸ் கியூப் (Rubik’s Cube) அதிவேகமாக தீர்ப்பது, கணிதம் மற்றும் அறிவியல் துறைகளில் சிறந்து விளங்குவது மட்டுமின்றி, தமிழர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலைகளான வில்வித்தை மற்றும் சிலம்பம் ஆகியவற்றிலும் சிறப்பான சாதனைகளைப் படைத்துள்ளார்.
இதுவரை மாணவி 8 உலக சாதனைகளையும், 15 கௌரவ விருதுகளையும் பெற்று பல்துறை திறமையாளராக திகழ்ந்து வருகிறார். மாணவியின் இந்த அசாதாரண திறமை, தமிழ்மொழி மீதான பற்றுதல் மற்றும் உலகளாவிய சாதனையைப் பாராட்டும் விதமாக, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.V. பிரசண்ண குமார், இ.கா.ப., மாணவியை நேரில் அழைத்து, உலக சாதனைச் சான்றிதழைப் பார்வையிட்டு பாராட்டி எதிர்காலத்திலும் கல்வி மற்றும் திறன் சார்ந்த பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி, மாவட்டத்திற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்தினார் .
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















