மதுரை: மதுரை மாவட்டம், செக்கானூரணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கம்பட்டி சாலையில் காவல்துறையினர் நடத்திய தீவிர ரோந்து பணியின் போது, சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த ஹூண்டாய் வெர்னா காரை சோதனையிட்டனர். அக்காரில் இருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த சிபியோன்ராஜ் (20). மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த லோகபாண்டி (21). நந்தகுமார் (21). தேவவன் (20). சுபாஷ் (25). மற்றும் விஷால் (19). ஆகிய 6 வாலிபர்களைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் ஆன்லைன் செயலி (App) மூலம் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை ஆர்டர் செய்து, கூரியர் மூலமாக பெற்று விற்பனையில் ஈடுபட்டது அம்பலமானது. சட்டவிரோதமாக போதை மாத்திரைகள் மற்றும் பயங்கர ஆயுதங்களை வைத்திருந்த குற்றத்திற்காக 6 பேரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 680 போதை மாத்திரைகள், 1 ஏர் பிஸ்டல், 2 அடி நீளமுள்ள 11 வாள்கள், ஹூண்டாய் வெர்னா கார், கேடிஎம் டியூக் இருசக்கர வாகனம், 6 மொபைல் போன்கள் மற்றும் 1 ஆப்பிள் லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இனிவரும் காலங்களில் இது போன்ற போதைப்பொருள் புழக்கம் மற்றும் ஆயுதக் கலாச்சாரத்தில் ஈடுபடுவோர் மீதும், அவர்தம் உறவினர்கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை பாயும் என்றும், அவர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்படும் என்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் குறித்த ரகசிய தகவல்களை பொதுமக்கள் 94981-81206 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மதுரை மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்




















