தென்காசி: தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரில் ஒரு திருமண வீட்டில் கடந்த 29 ஆம் தேதி விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்த போது, முகமூடி அணிந்து வந்த கும்பல் பொதுமக்களை அரிவாளால் வெட்டியது. இதில், 6 பேர் பலத்த காயமடைந்தனர். இதே கும்பல் மானூர் அருகேயுள்ள தெற்குப்பட்டி கிராமத்துக்குள் புகுந்து இருவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மரு. வி. பிரசன்னகுமார், இ.கா.ப., (திருநெல்வேலி), அசோக்குமார் (தென்காசி) ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அந்தக் கும்பலைத் தேடி வந்தனர். இந்நிலையில், சேரன் மகாதேவி அருகே பதுங்கியிருந்த இசக்கிமுத்து (19). மற்றும் 3 சிறார்களை முதலில் கைது செய்தனர்.
மானூர் பகுதியில் நெட்டூரைச் சேர்ந்த மாரியப்பன் (20). பிரமுத்து (21). அம்பை பகுதியில் பிரம்மதேசத்தைச் சேர்ந்த நவீன் (20). சஞ்சய் (20). என மொத்தம் 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய நெட்டூரைச் சேர்ந்த சண்முகையா மகன் அய்யப்பனை (21) தேடி வந்தனர். அவர், முக்கூடல் அருகே உள்ள அரசன்குளம் பகுதியில் பதுங்கியிருப்பதாக தனிப்படைக்கு கிடைத்த தகவலின் படி (31.05.26) அன்று தனிப்படை காவல்துறையினர் அங்கு சென்ற போது, அய்யப்பன், அரிவாளால் காவல்துறையினரை வெட்டி உள்ளார் . இதில், தனிப்படை தலைமைக் காவலர் முத்துக்குமார் (45). காவலர் பாலசுப்பிரமணியன் (35). ஆகியோர் காயமடைந்தனர். இதையடுத்து, தற்காப்புக்காக ஐயப்பனை துப்பாக்கியால் காலில் சுட்டு பிடித்தனர். இதற்கிடையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலர்களை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.வி. பிரசன்னகுமார், இ.கா.ப., நேரில் சென்று நலம் விசாரித்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்


















