கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, விநாயகர் சிலைகள் நிறுவுதல் மற்றும் கரைத்தல் தொடர்பாக தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை விளக்கும் ஆலோசனைக் கூட்டம், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின், IPS அவர்கள் தலைமையில் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், விநாயகர் சிலைகள் நிறுவப்படும் இடங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், ஒலிபெருக்கி பயன்பாடு, ஊர்வல நடைமுறைகள், போக்குவரத்து ஒழுங்குமுறைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகள் மற்றும் சிலைகள் கரைக்கும் போது கடைபிடிக்க வேண்டிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், பொதுமக்களின் பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு நிலை பராமரிப்பு, மத நல்லிணக்கம் மற்றும் அமைதியான முறையில் விழா கொண்டாடப்படுவதன் அவசியம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




















