மதுரை: சமயநல்லூர் உட்கோட்டம், நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது.
இவ்வழக்கின் வாதியான சந்தனகருப்பு (வயது 32). என்பவர் தனது குடும்பத்துடன் கொடிமங்கலம் கிராமத்தில் வசித்து வருவதுடன், தாராபட்டி இந்தியன் ஆயில் பெட்ரோல் பல்க்கில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று (17.08.2026) இரவு சுமார் 22.45 மணியளவில், பெயர் மற்றும் முகவரி தெரியாத 25 முதல் 35 வயதிற்குட்பட்ட 3 நபர்கள், பதிவு எண் தெரியாத இருசக்கர வாகனத்தில் சம்பவ இடத்திற்கு வந்து பெட்ரோல் நிரப்புவது போல் பாசாங்கு செய்து, அங்கிருந்த ஊழியர்களைக் கத்தியைக் காட்டிக் மிரட்டி, பெட்ரோல் பல்க்கில் வைத்திருந்த ₹34,800/- பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து பெட்ரோல் பல்க் ஊழியர்கள் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்ததையடுத்து, வாதி சம்பவ இடத்திற்குச் சென்று நடந்த விவரங்களை அறிந்து கொண்டார். பின்னர், நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஆஜராகி அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் சமயநல்லூர் உட்கோட்டக் காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில், வழக்கு பதிவு செய்யப்பட்ட எட்டு மணி நேரத்திற்குள் இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளான மகாலிங்கம் (21). மற்றும் முத்து இளங்கோவன் (22) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து ஒரு இருசக்கர வாகனம், ஒரு கத்தி மற்றும் மூன்று செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், தலைமறைவாக உள்ள மூன்றாவது குற்றவாளி அசோக் என்பவரைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. துரிதமாகச் செயல்பட்டு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்த தனிப்படையினரை மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. N. தேவநாதன் அவர்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்




















