தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரா. சிவபிரசாத், இ.கா.ப., அவர்கள் தலைமையில் (17.08.2026) தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 350 பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதனைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும்போது முறையான சீருடை அணிதல், தலைமுடியை சீராக வைத்திருத்தல் உள்ளிட்ட ஒழுக்க விதிகளை முறையாக கடைபிடிக்கவும், சாதிகளை குறிக்கும் வகையில் வண்ணமயமான கயிறுகள் அணிவதை தவிர்க்கவும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்குமாறு தெரிவித்தார். மாணவர்களுக்கிடையே ஏற்படும் சண்டைகள் மற்றும் பிற பிரச்சனைகள் குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டால், சீருடை அணியாத காவலர்கள் மூலம், ஆசிரியர்கள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு, அவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்.
மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்கான காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து பள்ளி கல்லூரிகளில் போதைப்பொருட்கள் பயன்பாடு குறித்து தகவல் தெரிந்தால் 8300014567 என்ற இலவச எண்ணிற்கு அழைத்து புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பான மற்றும் போதைப்பொருள் இல்லாத எதிர்காலத்தை உருவாக்க காவல்துறை – கல்வி நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.




















