மதுரை: மதுரை மாவட்டத்தில் குற்றச் செயல்களை தடுக்கவும், சாலைப் பாதுகாப்பை நவீனப்படுத்தவும், மாவட்டம் முழுவதும் 30 முக்கிய இடங்களில் அதிநவீன தானியங்கி ‘ANPR’ (Automatic Number Plate Recognition) கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இக்கண்காணிப்பு அமைப்பின் களச் செயல்பாடுகளையும் முன்னேற்பாடுகளையும் மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டுத் தீவிர ஆய்வு மேற்கொண்டார். மேலும் மதுரை மாவட்டத்தில் உள்ள முக்கிய புறவழிச்சாலைகள் (Bypass), நான்கு வழிச்சாலைகள் மற்றும் எல்லைச் சந்திப்புகள் என குற்றவாளிகள் தப்பியோட வாய்ப்புள்ள 30 இடங்கள் இதற்கெனத் துல்லியமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இக்கருவிகள் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களின் பதிவு எண்களைக் கூட இரவு, பகல் பாராது துல்லியமாகப் படம்பிடித்துத் தரவுத்தளத்துடன் ஒப்பிடும் திறன் வாய்ந்தவை. கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரின் வாகனங்களை உடனுக்குடன் அடையாளங் கண்டு சுற்றிவளைக்கவும், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்லும் (Hit-and-Run) வாகனங்களைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தவும், போக்குவரத்து விதிமீறல்களைக் களையவும் இத்தொழில்நுட்பம் வினையூக்கியாகச் செயல்படும். வாகன ஓட்டிகளின் பாதுகாப்பான, விபத்தில்லா பயணத்திற்கும், பொதுமக்கள் அச்சமின்றி அமைதியான முறையில் வாழ்வதற்கும் வழிவகுக்கும். இத்திட்டம், மதுரை மாவட்ட பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்



















