மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் உட்கோட்டம், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2024ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட போக்ஸோ மற்றும் குழந்தை திருமண தடைச் சட்ட வழக்கில், மதுரை சிறப்பு நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. கள்ளிக்குடி சமூக நல அலுவலர் திருமதி. முத்துலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில், முதியனூர் (மல்லன்கிணறு, விருதுநகர் மாவட்டம்) பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை குழந்தை திருமணம் செய்த விவகாரத்தில், குற்றவாளி மருதுலிங்கம் (28, த/பெ மூவேந்திரபாண்டி), மொச்சிகுளம் கள்ளிக்குடி தாலுகா மதுரை மாவட்டம் என்பவர் கைது செய்யப்பட்டு வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருந்து வந்தது.
இவ்வழக்கின் புலனாய்வுப் பணிகளைத் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. ஆர். ராதிகா மற்றும் நீதிமன்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் திருமதி. மிச்சம்மாள் ஆகியோர் மிகச் சிறப்பாக மேற்கொண்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
(21.09.2026)ம் தேதி இவ்வழக்கை விசாரித்த போக்சோ வழக்குகள் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குற்றவாளி மருதுலிங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து தீர்ப்பை வழங்கினார்.
அதன்படி, குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் 1 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 2,000 அபராதமும், போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் மற்றும் ரூ.5,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்ட காவல்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இது போன்ற சட்டவிரோத செயல்கள் குறித்து பொதுமக்கள் உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கோ அல்லது 1098 என்ற உதவி மையத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம் எனவும் மதுரை மாவட்ட காவல்துறை தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்




















