திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் பகுதியில் பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற பழைய குற்றவாளியை, AI (செயற்கை நுண்ணறிவு) மற்றும் Face Recognition System (FRS) எனப்படும் முக அடையாளத்தை கண்டறியும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர். திண்டுக்கல் அபிராமி அம்மன் நகரைச் சேர்ந்தவர் சொர்ணம். கடந்த 24-ஆம் தேதி இவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், உள்ளே இருந்த 125 கிராம் தங்க நகைகள் மற்றும் 3 கிலோ வெள்ளிப் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இது குறித்து நகர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தத் துணிகர கொள்ளைச் சம்பவம் குறித்து நகர் டி.எஸ்.பி (DSP) கார்த்திக் மேற்பார்வையில், நகர் தெற்கு காவல் ஆய்வாளர் லிங்கபாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் சார்பு ஆய்வாளர்கள் முத்துக்குமார், பிரபாகரன், குற்றத்தடுப்பு சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜார்ஜ் எட்வர்ட் மற்றும் காவலர்கள் ராதா, முகமது அலி, விசுவாசம், சக்திவேல், ஜெயபாரதி உள்ளிட்டோர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சம்பவம் நடந்த பகுதியைச் சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி (CCTV) காட்சிகளைத் தனிப்படையினர் ஆய்வு செய்தனர். அதில் சிக்கிய சந்தேக நபரின் உருவத்தை, காவல்துறையின் நவீன FRS (Face Recognition System) மென்பொருளில் பதிவேற்றி ஆய்வு செய்தபோது, அந்த நபர் மதுரை மேலூரைச் சேர்ந்த விஜயசங்கர் என்பது உறுதியானது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா


















