கன்னியாகுமரி: விபத்தில்லா கன்னியாகுமரியை உருவாக்கும் “Zero Accident Kumari” என்ற உயரிய இலக்கை முன்னிறுத்தி, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின், ஐபிஎஸ் அவர்களின் தலைமையில் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் சாலை பாதுகாப்பு தன்னார்வலர்களுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், “சாலை பாதுகாப்பு என்பது காவல்துறையின் பொறுப்பு மட்டுமல்ல; பொதுமக்களும் தன்னார்வலர்களும் இணைந்து செயல்படும் போதுதான் விபத்தில்லா சமூகத்தை உருவாக்க முடியும்” என்று வலியுறுத்தினார்.
தன்னார்வலர்களின் பங்களிப்பு குறித்து விளக்கமளித்த அவர், இரவு நேரங்களில் தெளிவாக தெரியாத பேரிகேட்கள், டிவைடர்கள் உள்ளிட்ட இடங்களில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் தேவைப்படும் பகுதிகளை கண்டறிந்து தகவல் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், புதிய வேகத்தடைகள் அமைக்க வேண்டிய பகுதிகளை பரிந்துரைப்பதுடன், நடைபாதை ஆக்கிரமிப்புகள், போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் விளம்பரப் பதாகைகள் மற்றும் தவறாக நிறுத்தப்படும் வாகனங்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க உதவ வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
அதோடு, அதிக வேகத்தில் செல்லும் வாகனங்கள், சாலை பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் விபத்து அபாயம் உள்ள பகுதிகள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் தகவல்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இணைக்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்து உடனடி நடவடிக்கைக்கு வழிவகுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். சாலை விபத்துகளை குறைத்து, பாதுகாப்பான போக்குவரத்து சூழலை உருவாக்கும் நோக்கில் காவல்துறை மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை இந்தக் கூட்டம் வலியுறுத்தியது.




















