மதுரை: மதுரை மாவட்டம், கள்ளிக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் (கூடுதல் பொறுப்பு) உதவியாளராகப் பணிபுரிந்து வரும் திருமதி. ராஜேஸ்வரி என்பவர், பத்திரப்பதிவுக்காக வரும் பொதுமக்கள் மற்றும் ஆவண எழுத்தாளர்களிடமிருந்து லஞ்சப் பணம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், (23.09.2026) அதிகாரிகள் அங்கு திடீர் கூட்டாய்வு (Joint Surprise Check) மேற்கொண்டனர். அப்போது நடத்தப்பட்ட சோதனையில் திருமதி. ராஜேஸ்வரியின் கைப்பையிலிருந்து (Hand bag) கணக்கில் வராத ரூ. 1,79,710/- பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து, அவர் அலுவலகத்திலிருந்து கிளம்புவதற்காக நின்றிருந்த, ரியல் எஸ்டேட் புரோக்கர் திரு. தனசேகரன் என்பவரது மகிந்திரா 3XO காரின் (TN 64 AH 7583) டிக்கியைச் சோதனையிட்டதில், அதிலிருந்து கணக்கில் வராத ரூ. 12,09,000/- ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. அச்சமயம் காரில் திரு. தனசேகரனுடன், அவரது உறவினரான மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக நில எடுப்புப் பிரிவு வருவாய் ஆய்வாளர் திரு. சிவபெருமாள் என்பவரும் உடன் இருந்தார். இந்த அதிரடி சோதனையின் முடிவில், கணக்கில் வராத மொத்தம் ரூ. 13,88,710/- ரொக்கப் பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்




















