கன்னியாகுமரி: குற்றச் செயல்களை முன்கூட்டியே தடுக்கவும், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின், ஐபிஎஸ் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, கன்னியாகுமரி உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளுக்கு எதிரான கண்காணிப்பு மற்றும் சோதனை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இந்த நிலையில், போலீசாரால் தேடப்பட்டு வந்த ரவுடி மற்றும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளான நங்கூரன்பிலாவிளையைச் சேர்ந்த லிங்கராஜா என்கிற ‘காட்டு ராஜா’ மற்றும் பனக்கோட்டான்விளையைச் சேர்ந்த வசந்த் ஆகியோர், தங்களது நண்பர்களுடன் காட்டுப்பகுதியில் கறி விருந்தில் ஈடுபட்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் ட்ரோன் கேமரா உதவியுடன் அவர்கள் இருந்த இடத்தை துல்லியமாக கண்டறிந்தனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில், குற்றவாளிகள் இருவரும் மற்றும் அவர்களுடன் இருந்த 51 பேரும் சுற்றிவளைக்கப்பட்டனர்.
இந்த சோதனையின்போது 15 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், லிங்கராஜா மற்றும் வசந்த் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் இருந்த மற்றவர்களிடம், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளுடனான தொடர்புகள் மற்றும் அவர்கள் ஏதேனும் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கை கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




















