மதுரை: மதுரை மாநகராட்சி, மண்டலம் 2, மாட்டுத்தாவணி எதிர்புறம் உள்ள உணவகங்களில் மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, ஆணையாளர் , உணவகங்கள் தங்களுக்கு வரையறுக்கப்பட்ட எல்லையை விட கூடுதலாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டு, அவற்றை உடனடியாக அப்புறப்படுத்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், உணவகங்களில் பிளாஸ்டிக் பைகளில் உணவு வகைகள் பேக்கிங் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுவதை பார்வையிட்டதுடன், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து, இதுபோன்று மீண்டும் உபயோகித்தால் அபராதம் விதிக்கப்படும் என கடை உரிமையாளர்களிடம் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, மாட்டுத்தாவணி எதிர்புறம் உள்ள இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் ஆணையாளர் பார்வையிட்டு, இருசக்கர வாகனங்கள் நிறுத்திமிடத்திற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது தொடர்பாகவும், உரிமம் புதுப்பிக்கப்பட்டுள்ளது தொடர்பாகவும் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, உதவி ஆணையாளர்கள் மணிமாறன், தமிழரசன் , நகர திட்டமிடுநர் முரளி, உதவி நகர திட்டமிடுநர் கிருஷ்ணா , சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன் அவர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















