மதுரை: மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டம், அப்பன்திருப்பதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடச்சனேந்தல் LVB நகர் பகுதியில், கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுரை மாவட்ட காவல்துறையின் சிறப்பு குழுவினருக்கு (Special Team) ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், இன்று (29.11.2026) காலை, சிறப்பு குழுவினர் அப்பன்திருப்பதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடச்சனேந்தல் LVB நகர் பகுதியில் வசிக்கும் வரிப்புலி (எ) பாலகிருஷ்ணன் (வயது 30). த/பெ. பூலோகபாண்டியன், பாண்டவர்மங்களம், கோவில்பட்டி, தூத்துக்குடி என்பவரை விசாரணை மேற்கொண்டதில், அவர் கடந்த 2 மாதங்களாக கடச்சனேந்தல் LVB நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்தது.
மேற்படி நபரை கைது செய்து, அவரிடமிருந்து, 37.5 கிலோ கஞ்சா, பணம் ரூ.71,500/-, கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய ஒரு மொபைல் போன் மற்றும் ஒரு (Yamaha R15) இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக அப்பன்திருப்பதி காவல் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் (NDPS Act) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட நபரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாவட்ட காவல்துறை, போதைப்பொருள் விற்பனை, கடத்தல் மற்றும் ஆயுதங்களுடன் சட்டவிரோதமாக செயல்படுவோர் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுபோன்ற குற்றச்செயல்கள் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவித்து பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.விஜயராஜ்



















