திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே உள்ள சீவல்சரகு பகுதியைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி அலெக்ஸ் பாண்டியன் என்பவர் கையில் அரிவாளுடன் மற்றொரு நபர் அருகில் இருப்பது போன்றும், ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கியுடன் இருப்பது போன்றும் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டது. இது குறித்து செம்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, செம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் ஆறுமுகநைனார், சார்பு ஆய்வாளர் ஷேக் அப்துல்லா மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்தப் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்ட கடையநல்லூரைச் சேர்ந்த சந்திரன் (20). என்பவர் கோயம்புத்தூரில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



















