திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் போதைப்பொருட்களான கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் பதுக்கல், கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் மாவட்ட காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு, ரோந்து மற்றும் வாகனத் தணிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, (18.07.2026) அன்று இரவு சுமார் 9.45 மணியளவில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார், அவர்களின் உத்தரவின்படியும், வேடசந்தூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திருமதி பவித்திரா அவர்களின் மேற்பார்வையிலும், வேடசந்தூர் காவல் ஆய்வாளர் கணேசமூர்த்தி. சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணி மற்றும் மாவட்ட தனிப்படை தலைமையிலான காவல்துறையினர். திண்டுக்கல்-கரூர் சாலையில் வேடசந்தூர் அருகே சத்தியநாதபுரம் பகுதியில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது. கரூரிலிருந்து திண்டுக்கல் நோக்கி வந்த ஒரு காரின் மீது சந்தேகம் எழுந்ததையடுத்து, அதனை நிறுத்தி போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். மேற்கொள்ளப்பட்ட சோதனையில், காரின் உள்ளே சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டிருந்த 316 கிலோ கிராம் எடையிலான தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, காரை ஓட்டி வந்த ரவிக்குமார் (வயது 31). த.பெ. நாகராஜ், சிக்கபேட்டரி. பெங்களூரைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. அவரை காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே கைது செய்ததுடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரும், அதிலிருந்த 316 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட ரவிக்குமார் மீது வேடசந்தூர் காவல் நிலையத்தில் உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
எச்சரிக்கை. பொதுமக்களின் உடல்நலனுக்கும். இளைஞர்களின் எதிர்காலத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது எதிர்காலத்திலும் சட்டப்படி மிகக் கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் என்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார், தெரிவித்துள்ளார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















