கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் (15.06.2026) நடைபெற்ற சிறப்பு பாராட்டு நிகழ்ச்சியில், 2024–2025 ஆம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற காவல்துறை மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் குழந்தைகள் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி இ. ஷஹ்னாஸ், இ.கா.ப., அவர்கள் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகைகளை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார். கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களின் சாதனையைப் பாராட்டிய அவர், எதிர்காலத்திலும் இதே உற்சாகத்துடன் உயரிய இலக்குகளை நோக்கி பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்களையும் பாராட்டிய காவல் கண்காணிப்பாளர், கல்வியே சிறந்த எதிர்காலத்திற்கு அடித்தளம் என்பதை வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள், அமைச்சுப் பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த பாராட்டு விழா அனைவரிடமும் வரவேற்பைப் பெற்றது.




















