கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறையினர் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் முக்கிய சாலைகள், சந்திப்புகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தீவிரமாக பரிசோதிக்கப்பட்டன. வாகன ஓட்டிகளின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதுடன், சந்தேகத்திற்கிடமான நபர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
குற்றச் செயல்கள், சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இது போன்ற கண்காணிப்பு மற்றும் வாகன சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் கூறினர்.



















