கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை விபத்துகளைக் குறைத்து, இரவு நேரப் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றும் நோக்கில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆர். ஸ்டாலின், ஐ.பி.எஸ்., முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, மாவட்டம் முழுவதும் நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்களில் விதிகளுக்கு புறம்பாக பொருத்தப்பட்டிருந்த அதிக வெளிச்சமூட்டும் முகப்பு விளக்குகள் (High-Beam LED/Xenon Lights) மற்றும் பலவண்ண அலங்கார விளக்குகள் (Multi-Color Lights) அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், அனைத்து முக்கிய பகுதிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்களின் தலைமையில் போக்குவரத்து காவல்துறையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிக வெளிச்சம் கொண்ட முகப்பு விளக்குகள், எதிரே வரும் வாகன ஓட்டுநர்களின் பார்வையை பாதித்து விபத்துகளுக்கு காரணமாக இருப்பதாகவும், விதிமீறி பொருத்தப்படும் பலவண்ண விளக்குகள் ஓட்டுநர்களின் கவனத்தைச் சிதறடித்து சாலைப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. சோதனைகளின் போது விதிமீறல் கண்டறியப்பட்ட வாகனங்களின் கூடுதல் விளக்குகள் சம்பவ இடத்திலேயே அகற்றப்பட்டு, உரிய அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. வாகன உற்பத்தியாளர் நிறுவனங்கள் வழங்கும் தரப்படுத்தப்பட்ட விளக்குகளைத் தவிர, கூடுதலாக பொருத்தப்படும் விளக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எச்சரிக்கையை மீறி மீண்டும் இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களின் பதிவுச் சான்றிதழ் (RC) ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை கடுமையாக எச்சரித்துள்ளது. இரவு நேரங்களில் பாதுகாப்பான மற்றும் விபத்தில்லா பயணத்தை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.




















