கன்னியாகுமரி: சாலை விபத்துகளை குறைத்து, இரவு நேரப் பயணத்தை பொதுமக்களுக்கு பாதுகாப்பானதாக மாற்றும் நோக்கில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின், ஐ.பி.எஸ். அவர்களின் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் இரண்டாவது நாளாக சிறப்பு வாகனத் தணிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சோதனைகளின் போது, விதிமுறைகளை மீறி வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த அதிக வெளிச்சம் தரும் LED மற்றும் Xenon முகப்பு விளக்குகள், பலவண்ண அலங்கார விளக்குகள் மற்றும் பிற சட்டவிரோத ஒளி அமைப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும், விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், அதிக வெளிச்சம் தரும் மற்றும் விதிமீறி பொருத்தப்படும் ஒளிவிளக்குகள் எதிரே வரும் வாகன ஓட்டிகளின் பார்வையை பாதித்து, சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணமாக அமைகின்றன. இதுபோன்ற அபாயங்களைத் தடுக்கவே இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு செயல்படும் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் இந்த நடவடிக்கை, மாவட்டத்தில் சாலை விபத்துகளை பூஜ்ஜிய நிலைக்குக் கொண்டு வருவதை இலக்காகக் கொண்ட “Zero Accident Kumari” திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த அதிரடி நடவடிக்கை, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தொலைநோக்கு சிந்தனை மற்றும் மக்கள் நலன் சார்ந்த அணுகுமுறையை வெளிப்படுத்துவதாக பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.




















