மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலம் உட்கோட்டம், சிந்துபட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி உயிரிழந்த தலைமைக் காவலர் முத்துக்குமாரின் மனைவி ஜனனி, கடந்த ஆறு மாதங்களாக அரசிடமிருந்து நிதி உதவி கிடைக்கவில்லை என்றும், தலைமைச் செயலகத்தில் முதல்வரைச் சந்திக்கச் சென்றபோது காவலர்கள் தடுத்ததாகவும் தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியானது. இது குறித்து மதுரை மாவட்ட காவல்துறை அளித்துள்ள விளக்கத்தில், கடந்த (22.05.2026) அன்று உயிரிழந்த தலைமைக் காவலர் முத்துக்குமாரின் குடும்பத்திற்கு குடும்பப் பாதுகாப்பு நிதி ரூ.5 லட்சம், இறுதிக்கால விடுப்புச் சம்பளம் ரூ.3,07,872, பயன்படுத்தப்படாத ஈட்டிய விடுப்புச் சம்பளம் ரூ.1,71,040 மற்றும் சிறப்பு வருங்கால வைப்பு நிதி ரூ.30,493 என மொத்தம் ரூ.10,09,405 வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை அனைத்தும் அவரது மனைவி ஜனனியின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
மேலும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கிடைக்க வேண்டிய தொகையைப் பெறுவதற்கான நடவடிக்கையில், உயிரிழந்த காவலரின் தாயாரிடமிருந்து தடையில்லாச் சான்று பெறப்படாமல் நிலுவையில் உள்ளதாகவும், குடும்பப் பிரச்சினை காரணமாக கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கான நடவடிக்கையும் நிலுவையில் உள்ளதாகவும் காவல்துறை விளக்கமளித்துள்ளது.



















