திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி காவல் நிலையச் எல்லைக்குட்பட்ட பாச்சலூரில் உள்ள தோப்பையன்காடு எஸ்டேட் விருந்தினர் இல்லத்திற்கு கடந்த (18.10.2012) அன்று ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் சினிமா படம் எடுக்கப் போவதாகவும், அதற்காக கதை (Discussion) செய்ய வேண்டுமென்றும் கூறி, தனது நண்பர்களான உளுந்தூர்பேட்டையை சேர்ந்த சண்முகசுந்தரம், சென்னையை சேர்ந்த சுந்தரமூர்த்தி மற்றும் காஞ்சிபுரத்தை சேர்ந்த வரதராஜன் ஆகியோருடன் சென்று தங்கியுள்ளார்.
கடந்த (20.10.2012) அன்று, தாங்கள் எடுக்கப்போகும் திரைப்படத்திற்குப் பெயர் வைப்பதில் இவர்களிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, ஞானசேகரன், சுந்தரமூர்த்தி மற்றும் சண்முகசுந்தரம் ஆகிய மூவரும் சேர்ந்து வரதராஜன் மற்றும் தண்டபாணி ஆகிய இருவரையும் கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தாண்டிக்குடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, எதிரிகள் மூவரும் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த வழக்கானது பழனி கூடுதல் மாவட்ட அமர்வு (ADJ) நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது.
கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் பழனி ADJ நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இவ்வழக்கை விரைந்து முடித்துத் தண்டனை பெற்றுத் தரும் நோக்கில், திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில், கொடைக்கானல் உட்கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளர் காயத்திரி மற்றும் தாண்டிக்குடி காவல் நிலையக் காவல் ஆய்வாளர் பாண்டியம்மாள் ஆகியோர் சாட்சிகளை விரைந்து ஆஜர்படுத்தி உரிய நடவடிக்கை மேற்கொண்டனர். இதன் காரணமாக, (15.10.2026) நடைபெற்ற இறுதி விசாரணையில், குற்றவாளிகளான ஞானசேகரன், சுந்தரமூர்த்தி மற்றும் சண்முகசுந்தரம் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனையும். தலா ரூ.40,000/-அபராதமும் விதித்து பழனி ADJ நீதிமன்ற நீதிபதி அவர்கள் தீர்ப்பளித்தார். அதனைத் தொடர்ந்து, எதிரிகள் மூவரும் நீதிமன்றக் காவல் மூலம் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















