திருப்பத்தூர்: திருப்பத்தூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் நாட்றம்பள்ளி காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் கேத்தாண்டப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுகர் மில் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒரு ஷேர் ஆட்டோவை சோதனை செய்தபோது, அதில் அரசு மதுபான பாட்டில்கள் அடங்கிய பெட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டது.
தொடர்ந்து ஷேர் ஆட்டோ மற்றும் மதுபானப் பெட்டிகளை கைப்பற்றி மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (35). மற்றும் பாபு (32). ஆகியோர் அரசு மதுபான பாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு அவர்கள்மீது வழக்குப் பதிவு செய்து (05.06.2026) சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அவர்களிடமிருந்து சுமார் 600 அரசு மதுபான பாட்டில்களும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஷேர் ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டன.




















