தூத்துக்குடி: தூத்துக்குடிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நை. சிலம்பரசன் அவர்கள், அனைத்து காவல் நிலையங்களில் வழக்குகளில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்து வரும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி கடந்த 1997ம் ஆண்டு முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட திருநெல்வேலியைச் சேர்ந்த சேகர் (54/26). என்பவர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததையடுத்து கடந்த 2001ம் ஆண்டு குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-II குற்றவாளிக்கு பிடியாணை பிறப்பித்தது.
இதனையடுத்து தலைமறைவான குற்றவாளி சேகரை போலீசார் தேடி வந்த நிலையில் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சுனில் மேற்பார்வையில் முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. கிங்ஸ்லி தேவ் ஆனந்த், சார்பு ஆய்வாளர் திரு. முகிலரசன் மற்றும் போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த குற்றவாளியை (09.02.2026) கைது செய்து சிறையிலடைத்தனர். மேற்படி பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 25 வருடங்களாக தலைமறைவாக இருந்து வந்த குற்றவாளியை கைது செய்த காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நை. சிலம்பரசன் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
















