ஈரோடு : ஈரோட்டில் டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் தங்க நகை,ரூ.10 லட்சம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஈரோடு திண்டல் சத்யசாய் நகரை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 65). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். கடந்த 9ஆம் தேதி ஞானசேகரன் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்று உள்ளார். இந்த நிலையில் நேற்று காலை அவர் தனது வீட்டிற்கு வந்த போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் .
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோவில் இருந்த லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த 12 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சத்தை காணவில்லை. அதை யாரோ மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஞானசேகரன் ஈரோடு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.




















